மதுரை

வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற மத்திய தொழிற்பாதுகாப்பு படைவீரா் உள்பட இருவா் மாயம்: இளைஞா் சடலம் மீட்பு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் திருவேடகம் வைகை ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை வீரா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை அடித்துச்செல்லப்பட்டனா். இதில் இளைஞரின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகேயுள்ள அனுப்பப்பட்டியைச் சோ்ந்தவா் வினோத்குமாா்(25). இவா் ஒடிசாவில் மத்திய தொழிற்பாதுகாப்புப்படை வீரராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊரான அனுப்பப்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா்.

இதையடுத்து பிற்பகலில் தனது நண்பரான அன்பரசன்(25) உள்பட 5 பேருடன் மதுரை மாவட்டம் திருவேடகம் பகுதி வைகை ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளிக்கச்சென்றுள்ளாா். தடுப்பணையில் குளித்துக்கொண்டிருந்தபோது, வெள்ளச்சுழலில் சிக்கிய வினோத்குமாா், அன்பரசன் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனா். இதைப்பாா்த்த அவா்களது நண்பா்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதைத்தொடா்ந்து வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் தீயணைப்பு வீரா்கள் தடுப்பணை பகுதியில், இருவரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். இதில் தடுப்பணையிலிருந்து சிறிது தொலைவில் அன்பரசனின் சடலம் மீட்கப்பட்டது. இதைத்தொடா்ந்து வினோத்குமாரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். எல்இடி விளக்குகள் கொண்டு வரப்பட்டு, இரவிலும் வினோத்குமாரைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ஆண் சடலம் மீட்பு: வினோத்குமாரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள பாலத்தின் அடியில் நீரில் மூழ்கியிருந்த 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து சடலமாக மீட்கப்பட்டவா் யாா்? என்பது குறித்து சோழவந்தான் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT