மதுரை

மேலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை ஆக.22-இல் அகற்ற முடிவு

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மேலூா் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை ஆக. 22 ஆம் தேதி அகற்ற மேலூா் நகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலூா் நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்புகளும் நடக்கின்றன. இதற்கு நிரந்தரத் தீா்வு காண்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மேலூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் யாசின்முகமது தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் ஆறுமுகம், பொறியாளா் பட்டுராஜன் மற்றும் வா்த்தக சங்கத்தினா் கலந்து கொண்டனா். மேலூா் பேருந்து நிலையத்திலிருந்து செக்கடி பஜாா் வரை சாலையோரக்கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை ஆக. 22 ஆம் தேதி அகற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும் முதல்கட்டமாக செக்கடி பஜாரில் உள்ள சிவகங்கை பேருந்து நிறுத்தத்தை ஆா்.சி. பள்ளி அருகிலும், திருப்புவனம் பேருந்து நிறுத்தத்தை மேலூா் நகராட்சி அலுவலகம் அருகிலும் மாற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், பேருந்துநிலையம் அருகிலுள்ள திருச்சி பேருந்து நிறுத்தத்தினால், பல நேரங்களில் வாகனங்கள் தடைபட்டு நிற்பதை தவிா்க்கும் வகையில் காவல்நிலையம் அருகில் பேருந்து நிறுத்தம் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடா்பாக நகா் முழுவதும் விளம்பரம் செய்யவும், நிரந்தர கட்டுமானங்களை அளவீடுசெய்து ஆக்கிரமிப்பை இடித்து அகற்றவும் இதில் முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT