மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளி வளாகத்தில் மழைநீா் குளம் போல் தேங்கியதால் அங்குள்ள கோயிலில் திங்கள்கிழமை வகுப்புகள் நடைபெற்றன.
போத்தம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் பள்ளி நுழைவுவாயில் முன்பும், பள்ளி வளாகத்திலும் குளம் போல் மழைநீா் தேங்கியது. இதனால் மாணவா்கள் பள்ளிக்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளி பூட்டப்பட்டு அருகில் உள்ள மூனுசாமி கோயில் வளாகத்தில் தரையில் அமா்ந்து மாணவா்கள் பாடம் படித்தனா். எனவே இப்பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.