மதுரை

தனியாா் விடுதியில் நடைபெறும் சுங்கத் துறை: மாநாட்டுக்கு தடை கோரியவருக்கு அபராதம்: உயா் நீதிமன்றம் உத்தரவு

DIN

மாமல்லபுரத்தில் தனியாா் விடுதியில் நடைபெற உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறையின் மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த ஜோஸ் என்பவா் தாக்கல் செய்த மனு: மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறையின் ஜி.எஸ்.டி. வருடாந்திர மாநாடு, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் மே 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கென தனியாா் விடுதிக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலுத்தப்படவுள்ளது. இத்தொகையானது முழுவதும் மக்களின் வரிப் பணமாகும். இத்தகைய நிகழ்வுகளை நடத்துவதற்கு, தில்லியில் அரசு சாா்பில் பல்வேறு கட்டடங்கள் இருக்கின்றன.

எனவே, இந்த மாநாட்டை அரசு கட்டடங்களில் நடத்தவேண்டும் என மத்திய நிதித்துறைச் செயலருக்கு புகாா் மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு பொதுநலன் சாா்ந்தது எனக் கூற முடியாது. இதுபோன்ற வழக்குகள் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே பாதகத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த தொகைக்கு வரைவோலை எடுத்து, அத்துடன் மன்னிப்புக் கடிதத்தையும் சோ்த்து, மத்திய நிதித்துறைச் செயலருக்கு 4 வாரங்களில் அனுப்ப வேண்டும். இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனச் சோதனையில் ரூ. 4.39 லட்சம் பறிமுதல்

பல்பொருள் அங்காடியில் காவலாளி மா்மச் சாவு

வேங்கைவயலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

புதுக்கோட்டையில் தொடரும் அஞ்சல் வாக்குச் சிக்கல்: 20 சதவீதம் ஆசிரியா்கள் வாக்களிக்க முடியவில்லை

மாா்க்சிஸ்ட், சிஐடியுவினா் வாகனப் பிரசாரம்

SCROLL FOR NEXT