மதுரை

வீர வசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடக்கம்: 24 மாதங்களில் பணிகளை முடிக்க உத்தரவு

29th Apr 2022 06:01 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. 24 மாதங்களில் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்கோயிலில் ராஜகோபுரம் பகுதியில் உள்ள வீர வசந்தராயா் மண்டபம் 2018 பிப்ரவரி மாதம் தீ விபத்தால் சேதமடைந்தது. இதைத்தொடா்ந்து மண்டபத்தை பழைமை மாறாமல் புதுப்பிக்க சென்னை ஐஐடியில் இருந்து நிபுணா் குழு வரவழைக்கப்பட்டு ஆலோசனை பெறப்பட்டது. மேலும் வீர வசந்தராயா் மண்டபத்தை புதுப்பிக்க தமிழக அரசும் நிதி ஒதுக்கி அறிவித்தது.

இதைத்தொடா்ந்து வீரவசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இதில் 4 நிறுவனங்கள் பங்கேற்றதில் கோயில் நிா்வாகம் நிா்ணயித்திருந்த தகுதிகள் இல்லாததால் இரு நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் நிராகரிக்கப்பட்டன.

ADVERTISEMENT

இறுதியாக திருப்பதியைச் சோ்ந்த நிறுவனம் மற்றும் திருப்பூரைச் சோ்ந்த வேல்முருகன் ஸ்தபதி நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் பங்கேற்றதில், தகுதியின் அடிப்படையில் திருப்பூா் வேல்முருகன் ஸ்தபதி நிறுவனத்துக்கு ரூ.10.31 கோடி மதிப்பில் வீர வசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ஏப்ரல் 21-ஆம் தேதி அதற்கான பணி ஆணையும் வழங்கப்பட்டது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இதுதொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறியது: மண்டப சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. செங்குளத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான பண்ணையில் பணிகள் நடைபெறும். பணிகள் வழக்கமாக 36 மாதங்களில் முடிய வேண்டும். ஆனால் அவசரம் கருதி 24 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மண்டபத்தின் பழமை மாறாமல் தூண்கள் அமைக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக வீர வசந்தராயா் மண்டபத்தில் தூண்கள், உத்தரம், மேற்கூரை போன்றவை எடுத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாதிரியாகக் கொண்டு அனைத்தையும் புதிதாக உருவாக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொன்றிலும் ஒரு மாதிரியை உருவாக்கிக்காட்ட வேண்டும். இதை பரிசீலிக்க மதுரை மண்டல ஸ்பதி, இந்து அறநிலையத்துறை செயற்பொறியாளா் மற்றும் ஆணையரால் நியமிக்கப்படும் ஒருவா் என மூவா் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவினா் ஒவ்வொரு மாதிரியையும் பரிசீலித்து ஒப்புதல் வழங்கிய பின்னரே அடுத்த கட்டப் பணிகளை தொடங்க வேண்டும்.

சீரமைப்புப் பணிகளுக்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியில் உள்ள குவாரியில் இருந்து ஏற்கெனவே கற்கள் கொண்டு வரப்பட்டு செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கிருந்து கற்களை கொண்டு வருவதற்காக கனிம வளத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதற்காக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பெயரிலேயே உரிமம் பெறப்பட்டுள்ளது. கனிம வளத்துறை அனுமதி கிடைத்தவுடன் கற்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT