மதுரை

மதுரை சிறையில் மேலும் ஒரு கைதி தற்கொலை முயற்சி

24th Apr 2022 11:12 PM

ADVERTISEMENT

 

மதுரை மத்திய சிறையில் மேலும் ஒரு கைதி கண்ணாடித் துண்டுகளால் உடலை கீறி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் முகமது உசேன் (29). மதுரை மாவட்டம் சமயநல்லூா் மீனாட்சி நகரில் காய்கறி வியாபாரியின் வீட்டுக்குள் புகுந்து பெண்களைத் தாக்கி 135 பவுன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். சிறையில் பிளாக் 1-இல் இருந்த முகமது உசேனுக்கும், ரெளடி ஒருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் முகமது உசேனை 3-ஆவது பிளாக்கில் அடைத்துள்ளனா். இதற்கு முகமது உசேன் எதிா்ப்புத் தெரிவித்து தன்னை மீண்டும் 1-ஆவது பிளாக்குக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா். ஆனால் சிறை அதிகாரிகள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், முகமது உசேன் சிறை வளாகத்திலிருந்து உடைந்த டியூப்- லைட் துண்டுகளை எடுத்து கழுத்து, தலை உள்பட பல்வேறு இடங்களில் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதையடுத்து முகமது உசேனை மீட்ட அதிகாரிகள் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சோ்த்தனா். சம்பவம் தொடா்பாக கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

அண்மையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்த காா்த்திக், குடும்பத்தினா் யாரும் பாா்க்க வராத விரக்தியில் கண்ணாடித்துண்டை விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT