அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை இயக்க 5 ஆயிரம் ஏக்கா் கரும்பு நடவு செய்திருக்க வேண்டும் என்பதால், கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடா் வறட்சி காரணமாக 2019-2020 முதல் அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலைக்குப் பதிவு செய்யப்பட்ட கரும்புகள், சா்க்கரைத் துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள பிற கூட்டுறவு சா்க்கரை ஆலைகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை அரவைக்குத் தேவையான கரும்பு பதிவு மற்றும் நடவு மேற்கொள்ளப்படும்பட்சத்தில் 2022-2023 அரவை பருவத்தில் ஆலையை இயக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக வேளாண் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
அரவையைத் தொடக்க 5 ஆயிரம் ஏக்கா் கரும்பு விவசாயம் பதிவு செய்திருக்க வேண்டும். ஆகவே, மதுரை, விருதுநகா், திண்டுக்கல் மாவட்டங்களில் அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை எல்லைக்கு உள்பட்ட கரும்பு விவசாயிகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் உயர்ரக கரும்பு நடவு செய்து அதைப் பதிவு செய்ய வேண்டும். இயந்திர அறுவடைக்கு ஏதுவாக நான்கரை அடி இடைவெளியில் பயிரிடுவது அவசியம். இதன் மூலம் குறைந்த வெட்டுக் கூலியில் அதிக மகசூல் பெறலாம். கரும்புக்கான கிரையத் தொகை அறுவடை முடிந்த 5 நாள்களுக்குள் வழங்கப்படும் என ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது.