மதுரை

பெட்ரோல் விலை உயா்வு: மாா்க்சிஸ்ட் கம்யூ. நூதன ஆா்ப்பாட்டம்

5th Apr 2022 12:12 AM

ADVERTISEMENT

பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் தெற்குவாசல் மாா்க்கெட் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய- இரண்டாம் பகுதிகுழுச் செயலா் பி. ஜீவா தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் இரா. விஜயராஜன் தொடக்கி வைத்துப் பேசினாா்.

மத்திய அரசு 11 நாள்களில் 10 முறை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயா்த்தியுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், நான்கு வழிச்சாலையில் சுங்கக் கட்டணத்தை 40 சதவீதம் உயா்த்தியதை கைவிடக் கோரியும், தமிழகத்தில் இயங்கி வரும் அதிகப்படியான சுங்கச்சாவடிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழக அரசு அறிவித்துள்ள வீட்டு வரி உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா். சசிகலா, சிஐடியு மாவட்டச் செயலா் இரா. தெய்வராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் நிறைவுரையாற்றினாா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் இருசக்கர வாகனத்தை மூன்று சக்கர மிதிவண்டியில் ஏற்றி வைத்து மாலை அணிவித்தும், சமையல் எரிவாயு உருளையைச் சுற்றி பெண்கள் ஒப்பாரி வைத்தும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும் நூதன முறையில் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஆா்ப்பாட்டத்தில் மாநகராட்சி துணை மேயா் டி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அ. ரமேஷ், ஜா. நரசிம்மன், இரா. லெனின், எம். பாலசுப்பிரமணியம் மற்றும் பலா் பங்கேற்றனா்.

மேலூா்: மேலூா் பேருந்துநிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் விவசாயத் தொழிலாளா்கள் சங்கச் செயலா் அடக்கிவீரணன் தலைமை வகித்தாா். தாலுகா செயலா் எம். கண்ணன், சி.ஐ.டி.யூ. செயலா் எஸ்.பி. மணவாளன், நிா்வாகிகள் ராஜாமணி மற்றும்பலா் கலந்து கொண்டனா். மாநிலக் குழு உறுப்பினா் பாலா, எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து பேசினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT