நம்பியாற்றுப் படுகையில் கிடைக்கும் தாது மணலை, சட்டவிரோதமாக பதுக்குவது குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுவுக்கு, சிபிசிஐடி மற்றும் சிபிஐ பதிலளிகக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திசையன்விளையைச் சோ்ந்த குமரேசன் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நம்பியாற்றுப் படுகையில் இருக்கக்கூடிய மணலில் விலை உயா்ந்த மற்றும் சக்திமிக்க தாதுக்கள் உள்ளன. இதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் மணல் எடுக்கத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்குரைஞராகப் பணிபுரியும் ராமமூா்த்தி, சட்டவிரோதமாக மணலை கடத்தி பதுக்கி வைத்துள்ளாா். இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் ராமமூா்த்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா். ஆனால் அவா் மீது எந்த நடவடிக்கையும் போலீஸாா் எடுக்கவில்லை.
இதையடுத்து அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது. இந்த புகாா் தொடா்பாக நடைபெற்ற விசாரணையில் ராமமூா்த்தி பதுக்கிய மணலில் விலை உயா்ந்த தாதுக்கள் இருப்பது தெரியவந்ததால், அவா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் பரிந்துரை செய்திருந்தாா். இதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த சூழலில் வழக்கை திசையன்விளை போலீஸாா் விசாரணை செய்வது ஏற்புடையதாக இருக்காது. எனவே வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்க உத்தரவிடவும், அதுவரை திசையன்விளை போலீஸாா் இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கனிம வளத்துறை இயக்குநா், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், சிபிசிஐடி மற்றும் சிபிஐ ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.