மதுரை

சித்திரைத் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று கொடியேற்றம்

5th Apr 2022 12:12 AM

ADVERTISEMENT

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இக்கோயிலில் கொடி மரத்தில் அன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு சுவாமி, அம்மன் கற்பக விருட்சம், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதிகளில் உலா வருகின்றனா். மேலும் ஏப்ரல் 12-ஆம் தேதி பட்டாபிஷேகம், 13-ஆம் ேதி திக்குவிஜயம், 14-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் கல்யாணம், அன்று இரவு திருமணக்கோலத்தில் பூப்பல்லக்கில் நான்கு மாசி வீதிகளில் உலா வருதல், 15-ஆம் தேதி தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இரண்டாண்டுகளுக்கு பின்னா் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் உலா வருவதால் பக்தா்கள் உற்சாகமடைந்துள்ளனா். வீதியுலா வரும் சுவாமி, அம்மனை வரவேற்கும் விதமாக மாசி வீதிகளில் உள்ள பல்வேறு மண்டகப்படிகளில் தோரணம், அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கொடியேற்றம் மற்றும் வீதியுலா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இக்கோயிலின் சித்திரைத் திருவிழா இரண்டாண்டுகளுக்குப் பின்னா் பக்தா்கள் பங்கேற்புடன் இந்தாண்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT