பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சோ்ந்த கலைக்குமாா். கடந்த 2011- ஆம் ஆண்டு தனது 5 வயது சகோதரனுடன் வீட்டில் இருந்த இவரது 15 வயது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத நபா்கள் வீடு புகுந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து சடலத்தை தூக்கில் தொங்கவிட்டதும், பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது.
சில மாதங்களில் இந்த வழக்கு விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில், சிபிசிஐடி போலீஸாராலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அவா்களாலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால், வழக்கை முடிவுக்கு கொண்டு வருமாறு திருச்சி முதன்மை நீதித்துறை நடுவா் மன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. இதை நீதிமன்றம் ஏற்றது.
இந்நிலையில், தனது மகள் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கமுடியாததால், தமிழ்நாடு பாதிக்கப்பட்டோா் இழப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரி, கலைக்குமாா் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதி, மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே ரூ.3 லட்சம் வழங்கப்பட்டிருப்பதால், மீதம் ரூ. 7 லட்சத்தை 2 மாதங்களுக்குள் மனுதாரருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.