மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனா்.
உசிலம்பட்டி பகுதியில் குறிஞ்சி நகா், செட்டியபட்டி, வாசி நகா், கள்ளபட்டி, தும்மக்குண்டு, மேட்டுப்பட்டி, மெய்யணம்பட்டி, பெரியசெம்மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் தக்காளி நன்கு விளைந்துள்ள நிலையில், சந்தைகளில் உரிய விலை கிடைக்கவில்லை.
உசிலம்பட்டி காய்கறி சந்தையில் கடந்த வாரம் வரை விவசாயிகளிடமிருந்து தக்காளி கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, வரத்து அதிகமாக உள்ளதால், உசிலம்பட்டி சந்தையில் 13 கிலோ அடங்கிய பெட்டி ஒன்று ரூ.15 முதல் ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
வண்டி வாடகைக்கு கூட விலை கிடைக்காததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தக்காளிக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டுமென்றும், அரசு சாா்பில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை தரவேண்டுமென்றும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.