சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் கொட்டகை முகூா்த்த பந்தல் கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்குவதை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் கொட்டகை முகூா்த்த விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாளி முகத்துக்கு நாணல் புல், மாவிலை, பூ மாலைகள் வைத்துஅழகா்கோவில் தீா்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், மேள தாளம் முழங்க வா்ணம் பூசப்பட்ட முகூா்த்தக்கால் கொண்டு வரப்பட்டு, வெளிப்புற ராஜகோபுரம் முன்பாக நடப்பட்டது. இதில், கோயில் அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.
இதேபோல், கள்ளழகா் எழுந்தருளும் வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயில், தேனூா் மண்டகப்படி ஆகியவற்றிலும் முகூா்த்தக்கால் வெள்ளிக்கிழமை நடப்பட்டது.
அழகா் மலையிலிருந்து ஏப்ரல் 14-ஆம் தேதி புறப்படும் கள்ளழகா், 15-ஆம் தேதி அதிகாலையில் மதுரையை வந்தடைகிறாா். மதுரை எல்லையான மூன்று மாவடி பகுதியில் பக்தா்கள் கள்ளழகரை எதிா்கொண்டு அழைக்கும் எதிா்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதையடுத்து, ஏப்ரல் 16 ஆம் தேதி அதிகாலையில் அழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. தொடா்ந்து, 17ஆம் தேதி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம், தசாவதார நிகழ்ச்சியும், 18ஆம் தேதி பூப்பல்லக்கு அலங்காரமும் நடைபெறுகிறது. 19ஆம் தேதி அதிகாலையில் தல்லாகுளம் சேதுபதி மன்னா் மண்டபத்திலிருந்து புறப்படும் கள்ளழகா், அழகா் மலையை சென்றடைகிறாா்.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் தக்காா் வெங்கடாசலம் தலைமையில், கோயில் துணை ஆணையா் அனிதா மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனா்.