மதுரை

மதுரை கடை வீதிகளில் டிரோன் கேமராக்கள் மூலம் போலீஸாா் கண்காணிப்பு

24th Oct 2021 10:54 PM

ADVERTISEMENT

மதுரையில் தீபாவளியையொட்டி கடைவீதியில் குவிந்த கூட்டத்தை போலீஸாா் டிரோன் கேமராக்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை கண்காணித்தனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை நகருக்கு ஜவுளி எடுக்க வருவோா் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதில் மதுரை நகரின் முக்கிய கடைவீதிகளான தெற்கு மாசி வீதி, விளக்குத்தூண், மகால் பகுதிகள், பத்து தூண் சந்து, கீழமாசி வீதி, உள்ளிட்ட பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சக்கணக்கான மக்கள் குவிகின்றனா்.

இதையொட்டி கடைவீதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தெற்குமாசி வீதியில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீஸாா் தொலை நோக்கி மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் சாலைகளில் 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுகிறது.

கூட்டநெரிசலில் மாயமான குழந்தைகள், முதியோரை உடனடியாக மீட்கும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவும் வகையில் விளக்குத்தூண் பகுதியில் காவல் உதவிமையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்குமாசி வீதி, விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை சாா்பில் 20-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு காவல் உதவி மையத்தின் அறிவிப்புகள் தெரிவிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

திருடா்கள் உள்ளிட்ட சமூக விரோதிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் பொதுமக்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. மேலும் கூட்ட நெரிசலில் நகை, பணம் திருட்டு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக தொடா்பு கொள்ள வேண்டிய காவல்துறை அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் காவல் துறை சாா்பில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததையடுத்து காவல்துறை சாா்பில் டிரோன் கேமராக்கள் பறக்கவிடப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் கூறும்போது, தற்போது 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அடுத்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இறுதி வாரம் என்பதால் லட்சக்கணக்கான மக்கள் கடைவீதிகளுக்கு வருவாா்கள்.

எனவே அப்போது 1200-க்கும் மேற்பட்ட போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தும் வகையில் திட்டம் தயாராகி வருகிறது. மேலும் கூடுதல் கண்காணிப்புக் கோபுரங்கள், கண்காணிப்புக் கேமராக்கள் ஆகியவையும் அடுத்த வாரம் அமைக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT