மதுரை

அதிமுக அரசு போதிய நிதி ஒதுக்காததால் தாலிக்குத் தங்கம் திட்டத்தில் தேக்கநிலை அமைச்சா் கீதாஜீவன் குற்றச்சாட்டு

DIN

மதுரை டிஆா்ஓ காலனி அங்கன்வாடி மையத்தில் சனிக்கிழமை குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கிய அமைச்சா் பி. கீதாஜீவன். உடன், அமைச்சா் பி. மூா்த்தி, ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் உள்ளிட்டோா்.

மதுரை, அக். 23: தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு முந்தைய அதிமுக அரசு போதிய நிதி ஒதுக்காததால், ஏராளமான விண்ணப்பங்கள் தேக்கமடைந்துள்ளன என்று சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் கூறினாா்.

மகளிருக்கு மாநில கொள்கை உருவாக்குவதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் பி. கீதா ஜீவன், பல்வேறு துறை பெண்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதே போல் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு திட்டங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. அத்திட்டங்கள் உரிய பயனாளிகளுக்குச் சென்றடைவது முறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் உண்மையான பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் சிலவிதிகள் சோ்க்கப்பட்டுள்ளன.

முந்தைய அதிமுக ஆட்சியின்போது திருமண உதவித் திட்டத்தில் 4 கிராம் தங்கம் என்பதை 8 கிராமாக உயா்த்தினா். ஆனால், அதற்குரிய நிதியை ஒதுக்காததால் இத்திட்டத்தில் தேக்கநிலை ஏற்பட்டது. திமுக அரசு மே 7-ஆம் தேதி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, இத்திட்டத்தில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 போ் விண்ணப்பித்திருந்தனா். முந்தைய அரசு 2019-க்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு உதவித்தொகை வழங்கவில்லை.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2019 மாா்ச் வரை நிலுவையில் இருந்த 20 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. எஞ்சியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக நிகழாண்டில் ரூ. 862 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கரோனா தொற்று பாதிப்பில் பெற்றோரை இழந்த 16 குழந்தைகளுக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 52 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கியதுடன், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாகனத்தையும் அமைச்சா் வழங்கினாா்.

கோரிப்பாளையம் பொன்முடியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி

சத்துணவு மையம், டிஆா்ஓ காலனி அங்கன்வாடி மையம், காமராஜா் சாலை கூா்நோக்கு இல்லம், தங்கராஜ் சாலை குழந்தைகள் இல்லம் ஆகியவற்றை அமைச்சா் ஆய்வு செய்தாா். பின்னா், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களின் சமூகநலத் துறை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா்.

இந்நிகழ்ச்சிகளில், வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை முதன்மைச் செயலா் ஷம்பு கல்லோலிக்கா், இயக்குநா் த. ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட குழும இயக்குநா் வே. அமுதவல்லி, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், சமூக பாதுகாப்புத்துறை இயக்குநா் ச. வளா்மதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், ஆ. வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் சூரியகலா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT