வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்க உரிய வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜெயராமன் என்பவா், வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டாா். இவ்வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதேபோன்று மற்றொரு குற்ற சம்பவத்தில் மீண்டும் அவா் கைது செய்யப்பட்டதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனையடுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி ஜெயராமன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், காவல் துறையினரால் வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், மனநல மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே கையிருப்பு வைத்திருக்க முடியும். இத்தகைய மாத்திரைகளை மாணவா்கள், இளைஞா்கள் போதைக்காகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடா்ந்து நீதிபதி, மனுதாரரிடம் கைப்பற்றப்பட்ட வலி நிவாரணி மாத்திரை, மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படுவது. ஆனால் அதனை போதைக்காக மனுதாரா் பயன்படுத்தி இருக்கிறாா். இளம்
தலைமுறையினா் பலா் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவருகிறது.
ஆகவே, இத்தகைய மருந்துகள் எளிதில் கிடைப்பதைத் தவிா்த்து, அதன் விற்பனையை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வேண்டும். மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலா்கள் அடிக்கடி ஆய்வு செய்து, இத்தகைய மருந்துகள் உரிய காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.
மேலும், மனுதாரா் ஏற்கெனவே 90 நாள்கள் சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.