வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரிய வழக்குகளை தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த பாலமுரளி தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் பல்வேறு சமூகத்தைச் சோ்ந்த மக்கள் உள்ளனா். கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியா் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 68 சமூகங்களைக் கொண்ட சீா்மரபினா்களுக்கு 7 சதவீதமும், மீதியுள்ள 40 சமூகங்களுக்கு 2.5 சதவீதமும் மட்டுமே இடஒதுக்கீடாக வழங்கப்பட்டிருக்கிறது. வன்னியா் உள்ஒதுக்கீடு காரணமாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் உள்ள மற்ற சமூகங்களைச் சோ்ந்தவா்களின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை கேள்விக்குறியாகியுள்ளன. இது ஏற்புடையதல்ல. சாதிவாரியாகக் கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்ட பிறகே உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஆகவே, வன்னியா்களுக்கு 10.5 உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவும், அதன் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதே கோரிக்கையுடன் 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த சில வாரங்களாக விசாரிக்கப்பட்டு வந்தன. வெள்ளிக்கிழமை, வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள் தீா்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.