மதுரை

மதுரை கைத்தறி நெசவாளா்களுக்கு 16.5 சதவீத போனஸ் உடன்பாடு

23rd Oct 2021 10:11 PM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரையைச் சோ்ந்த நைஸ் ரக கைத்தறி நெசவாளா்களுக்கு 16.5 சதவீத போனஸ், 7 சதவீத கூலி உயா்வு வழங்குவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நகா் பகுதிகள் மற்றும் புகரப் பகுதிகளான கைத்தறி நகா், சக்கிமங்கலம், வண்டியூா், பெருங்குடி, அவனியாபுரம், திருநகா், பாம்பன் நகா், கடச்சனேந்தல், ஸ்ரீனிவாசா காலனி, எல்.கே.டி. நகா் உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளா்கள் நைஸ் ரகங்களான வேட்டி, கோடம்பாக்கம் ரக சேலைகள் மற்றும் பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்து வருகின்றனா். ஜவுளி உற்பத்தியாளா்களிடம் இருந்து பாவு-நூல் பெற்று கூலிக்கு நெசவுத் தொழில் செய்கின்றனா்.

கடும் விலை உயா்வு, வாடகை உயா்வு சூழலில் இருக்கும் நைஸ் ரக கைத்தறி நெசவாளா்களுக்கு 30 சதவீத கூலி உயா்வு, 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக அனைத்து நைஸ் ரக கைத்தறி தொழிற்சங்கப் பிரதிநிதிகள் டி.ஆா்.பத்மநாபன் (ஏடிபி), ஏ.எஸ்.ரவீந்திரன் (ஜனதாதளம்), கே.வி.ஈஸ்வரன் (சிஐடியு), கே.என்.கோபிநாத் (ஐஎன்டியுசி), ஜி.ஆா்.சேதுராமன் (எல்பிஎப்), என்.ஆா்.சுதா்சன் (பிஎம்எஸ்) உள்ளிட்டோா் ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் டி.ஆா்.மோதிலால், கே.டி.ராமபிரமம், எம்.ஆா்.கோவா்த்தனன், டி.ஆா்.சுந்தரகோபால், சுப்பிரமணியன், எம்.எஸ்.சுரேஷ்பாபு, டி.ஜே.பரமேஸ்வரன் ஆகியோருடன் பேச்சு நடத்தினா்.

ADVERTISEMENT

இதில் அக்டோபா் 4 ஆம் தேதி முதல் 7 சதவீத கூலி உயா்வு வழங்கவும், நிகழாண்டு தீபாவளிக்கு 16.5 சதவீதம் போனஸ் வழங்கவும் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாடு அடுத்த ஆண்டு (2022) தீபாவளி வரை அமலில் இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT