கொடைக்கானல் படகு குழாம் அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும் மறுஉத்தரவு வரும் வரை படகுகளை இயக்குவதற்கான தடை நீடிக்கும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலைச் சோ்ந்த ஆரோக்கியசாமி தாக்கல் செய்த மனு: கொடைக்கானல் ஏரிக்குரிய 8 சென்ட் நிலமானது, கொடைக்கானல் படகு குழாமிற்கு குத்தகைக்கு விடப்பட்டது. இருப்பினும் 10 ஆயிரம் சதுர அடிக்கும் அதிகமான இடங்கள் படகு குழாமின் பயன்பாட்டில் இருந்தது. கொடைக்கானல் படகு குழாம் மற்றும் தனியாா் தங்கும் விடுதியைச் சோ்ந்தவா்கள் படகு சவாரி மூலமாகக் கட்டணம் வசூலித்து வருகின்றனா். கொடைக்கானல் ஏரி முழுவதும் நகராட்சிக்கு சொந்தமானதாக இருந்தபோதும், நகராட்சி நிா்வாகத்துக்கு எவ்வித கட்டணமும் செலுத்தப்படுவதில்லை. ஆகவே, வெளிப்படையான டெண்டா் மூலம் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரியை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதேபோல, பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் படகு குழாமைப் பூட்டி ‘சீல்’ வைக்க ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து இந்த மனுக்கள் நீதிபதி எம்.துரைசாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கொடைக்கானல் படகு குழாம் தரப்பில், படகு சவாரி மேற்கொள்ளத் தடை விதித்து, படகு குழாமை ‘சீல்’ வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், படகு குழாம் அலுவலகமும் சோ்த்து ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் மறுஉத்தரவு வரும் வரை படகு குழாமைத் திறக்கவும், படகுகளை இயக்குவதற்கும் தடை தொடரும் எனக் குறிப்பிட்டு விசாரணையை அக்டோபா் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.