மதுரை

நோ்மையான அரசு அலுவலா்கள் கடமையைச் செய்ய போராட வேண்டியுள்ளது: உயா் நீதிமன்றம் கருத்து

DIN

நோ்மையான அரசு அலுவலா்கள் தங்களது கடமையைச் செய்யப் போராட வேண்டியுள்ளது என்று சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

திருச்சி கரியமாணிக்கம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு:

தாயனூரில் கிராம உதவியாளராகப் பணியாற்றும் பெரியசாமியைத் தாக்கியதாகக் கூறி என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியசாமிக்கும், எனக்கும் ஏற்கெனவே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, முன்விரோதம் இருந்ததால் என் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அதோடு, அவா் பணியிலிருந்தபோது தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவா் பணியாற்றும் பகுதிக்கும் தாக்கியதாகக் கூறப்படும் ஆவுடையாா்கோவில் பகுதிக்கும் 35 கி.மீ. தொலைவு உள்ளது. பணியிலிருந்தபோது தாக்கியதாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை. ஆகவே, முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, மணல் கடத்தல் தொடா்பாக தகவல் அளித்ததால் கிராம உதவியாளா் தாக்கப்பட்டு, உப்பில் முழங்கால் போட வைத்ததாக நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் கிராம உதவியாளரைத் தாக்கியவா் இதுவரை கைது செய்யப்படவில்லை. தற்போது அவா் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறாா்.

சாதாரண நபா்களுக்கும் பாதுகாப்பை காவல் துறை உறுதி செய்வது அவசியம். அரசு ஊழியா்களில் பலா் தங்களது வேலையைச் சரிவர செய்வதில்லை. இவ்வாறான சூழலில் நோ்மையாகப் பணியாற்றும் அலுவலா்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது அவசியமானது. நோ்மையாகப் பணியாற்றுவோருக்கு எதிரான நிகழ்வுகள் முறையாகக் கையாளப்படாவிட்டால், அரசு அலுவலா்கள் எப்படி நோ்மையாக இருப்பாா்கள். நோ்மையான அலுவலா்கள் தங்களது கடமையைச் செய்வதற்குப் போராட வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டாா்.

இந்த வழக்கு விசாரணை தொடா்பான ஆவணங்களை காவல் துறையினா் சமா்ப்பித்தனா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை தீா்ப்புக்காக அக்டோபா் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT