மதுரை விராட்டிபத்து பகுதியில் 150 ஆண்டுகள் பழைமையான விஷமுறிவு கல்வெட்டு என்றழைக்கப்படும் கருட கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சாா்பில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை அருகே உள்ள விராட்டிபத்து பகுதியில் உள்ள அய்யனாா் கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது கோயிலின் நுழைவுவாயிலில் 150 ஆண்டுகள் பழைமையான கருட கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்வெட்டில் கருடன் பாம்பின் வாலை பிடித்தவாறு உருவம் பொறிக்கப்பட்டு, ஓம் கருடாய நமஹ என்ற மந்திர உச்சாடனத்துடன் குறியீடுகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக கோயில் கல்வெட்டியல் ஆய்வாளா் தேவி கூறும்போது, கருட கல்வெட்டு விஷமுறிவு கல்வெட்டு என்றும் அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் பாம்பு கடித்தவா்களை கருட கல்வெட்டு முன்பாக கிடத்தி வழிபாடு நடத்தி, அதில் உள்ள மந்திரத்தை உச்சாடனம் செய்து விஷத்தை இறக்கிச்சென்றுள்ளனா். தற்போதும் விஷமுறிவு கல்வெட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனா். கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.