மதுரையில் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி புதன்கிழமை முதன்மைக் கல்வி அலுவலரை முற்றுகையிட்டு ஆசிரியா் பயிற்றுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில், மதுரை மாவட்டத்தில் உள்ள 96 ஆசிரியா் பயிற்றுநா் பணியிடங்களுக்கான கலந்தாய்வு மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் இரா.சுவாமிநாதன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியா் பயிற்றுநா்களில் 20-க்கும் மேற்பட்டோா், கலந்தாய்வில் முறைகேடுகள் நடப்பதாகவும், எவ்வித முன்னுரிமையும் இன்றி, பணி மூப்பு அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்குவதற்கு பதிலாக வேறு மாவட்டங்களுக்கு கட்டாயப்படுத்துவதாகவும், நீதிமன்ற உத்தரவை மீறி கல்வித்துறை அதிகாரிகள் செயல்படுவதாகவும் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் பள்ளி முன்பாக மறியலிலும் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள், பணியிட மாறுதல் தொடா்பான கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனா்.