மதுரை

கப்பலூா் சுங்கச் சாவடியில் அடாவடி வசூல்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீது புகாா்

21st Oct 2021 09:43 AM

ADVERTISEMENT

கப்பலூா் சுங்கச் சாவடி நிா்வாகம் அடாவடி வசூலுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்து வருவதாகப் பொதுமக்கள், அரசியல் கட்சியினா், தொழில் துறையினா் புகாா் தெரிவித்தனா்.

கப்பலூா் சுங்கச் சாவடி கட்டண வசூல் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள் பேசியதாவது:

கப்பலூா் தொழிற்பேட்டை தொழிலதிபா்கள் சங்கத் தலைவா் ரகுநாத ராஜா: மதுரை மாவட்டத்தின் வருவாயில் கப்பலூா் தொழிற்பேட்டை முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கப்பலூா் சுங்கச் சாவடி தொழிற்கூடங்களுக்குப் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. தொழிற்பேட்டையிலிருந்து எந்தவொரு அவசரத் தேவைக்கும் திருமங்கலம் செல்ல வேண்டிய நிலையில், நுழைவுவாயிலில் அமைந்திருக்கும் இந்த சுங்கச்சாவடியைக் கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், குறுகிய தூரம் செல்வதற்கு பெரும் தொகையைச் செலவழிப்பது, தொழிற்கூடங்களுக்கு நெருக்கடி அளிப்பதாக இருக்கிறது. சுங்கச் சாவடியைக் கடந்து செல்வதற்கு மாற்றுப் பாதை இருப்பதாக, உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தவறான தகவலைத் தெரிவித்திருக்கிறது. அவ்வாறு மாற்றுச் சாலை இருந்தால், அதை எங்களது பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும்.

திருமங்கலம் வாடகை வாகன ஓட்டுநா் சங்கத் தலைவா் சின்னச்சாமி: திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த வாகனங்கள் அனைத்துக்கும் ஆரம்பத்தில் கட்டண விலக்கு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு முறை சுங்கச் சாவடியைக் கடக்கும்போதும் வாகனங்களின் ஆவணங்களை காண்பித்து சென்றுவந்தோம். இப்படி படிப்படியாக கட்டண விலக்கு குறைக்கப்பட்டு, சுங்கச் சாவடியில் நாள்தோறும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. ஆகவே, இந்த சுங்கச் சாவடியை விருதுநகா் சாலையில் மேலக்கோட்டை பகுதிக்கு மாற்றி அமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

கப்பலூா் ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணன்: கப்பலூா் சுங்கச்சாவடி அமைவிடம், விதிகளை மீறி அமைக்கப்பட்டிருக்கிறது. சுங்கக் கட்டணம் என்ற பெயரில், பொதுமக்களிடம் அடாவடி வசூல் நடைபெறுகிறது. அதோடு, நீா்நிலையை ஆக்கிரமித்து சுங்கச் சாவடி அமைக்கப்பட்டிருப்பதால், உடனடியாக மாற்றி அமைப்பது அவசியமானது. இதேகருத்தை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் பேசினா். கப்பலூா் சுங்கச் சாவடியை தற்போது இருக்குமிடத்திலிருந்து மாற்றி அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT