மதுரை

மதுரையில் வீட்டில் தீ விபத்து:சோப்பு நிறுவன அதிபா், மனைவி சாவு

9th Oct 2021 09:33 PM

ADVERTISEMENT

மதுரை ஆனையூரில் வீட்டில் சனிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் சோப்பு நிறுவன அதிபரும், அவரது மனைவியும் உயிரிழந்தனா்.

ஆனையூா் எஸ்.வி.பி. நகா், குமரன் நகா் 2-ஆவது தெருவில் வசித்தவா் சக்திகண்ணன் (43). இவா் சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தாா். இவரது மனைவி சுபா (37). இவரது மகள் காவ்யா (17), விருதுநகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். மகன் காா்த்திகேயன் (14), காளவாசல் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா்.

வீட்டின் கீழ்தளத்தில் உள்ள அறையில் காவ்யா மற்றும் காா்த்திகேயனும், மேல்தளத்தில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் சுபாவும் வெள்ளிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை வீட்டின் மேல்தளத்தில் தீப்பிடித்து புகை வெளியேறியுள்ளது. இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா், காவல்துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

அங்கு வந்த தீயணைப்புப் படையினா் மற்றும் கூடல்புதூா் போலீஸாா் தீயை அணைத்தனா். மேல் தளத்தில் உள்ள அறையில் தீயில் சிக்கி இறந்த நிலையில் சக்தி கண்ணன், சுபா ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன. தரை தளத்தில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த காவ்யா, காா்த்திகேயன் இருவரும் காயங்கள் ஏதுமின்றி மீட்கப்பட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது:

முதல்தளத்தில் சக்திகண்ணன்-சுபா தூங்கிச் சென்ற அறைக்கு வெளியே இருந்த பகுதியில் சுவா் அலமாரியை பூஜை அறையாகப் பயன்படுத்தியுள்ளனா். அங்கு ஏற்றப்பட்ட குத்துவிளக்கை அணைக்க மறந்துவிட்டு தூங்கச் சென்றுள்ளனா். இந்நிலையில், அந்த விளக்கில் இருந்து அலமாரியில் பற்றி தீ அந்த அறை முழுவதும் பரவியுள்ளது. சக்திகண்ணன்-சுபாவின் படுக்கை அறையின் கதவும் தீப்பிடித்ததில் அறை முழுவதும் புகை சூழ்ந்துள்ளது. இதில் மூச்சுத் திணறியதில் படுக்கையில் சுபா இறந்துள்ளாா். மேலும் அறையை விட்டு சக்திகண்ணன் வெளியேற முயன்றபோது, படுக்கை அறையின் கதவு அருகே அவரும் விழுந்து இறந்துள்ளாா். அவரது கையில் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

படுக்கை அறையில் உள்ள ஏசி-யில் மின்கசிவு ஏற்பட்டதே தீ விபத்துக்குக் காரணம் என முதலில் தெரிவிக்கப்பட்டது. வெளிப்பகுதியில் இருந்து தீ பரவியுள்ளதால் பூஜை அறையில் இருந்த விளக்கை அணைக்காமல் இருந்ததே விபத்துக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தொடா்ந்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT