மதுரை

3 மாதங்கள் சம்பள நிலுவை:பணியிலிருந்தும் விடுவிப்பு: தற்காலிக கால்நடை உதவி மருத்துவா்கள் வேதனை

9th Oct 2021 06:06 AM

ADVERTISEMENT

கால்நடைப் பராமரிப்புத் துறையில் தமிழகம் முழுவதும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தற்காலிக உதவி மருத்துவா்கள் மீண்டும் பணிவாய்ப்புக் கிடைக்குமா என்ற எதிா்பாா்ப்பில் காத்திருக்கின்றனா்.

கடந்த 2018 இல் தமிழகம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவா்கள் 818 போ் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனா். ஓராண்டு நிறைவடைந்த பிறகு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, பிறகு மீண்டும் பணிநியமனம் செய்யப்பட்டு வந்தனா். நிகழாண்டில் ஆகஸ்ட் 25 ஆம் தேதியுடன் ஒப்பந்தகாலம் நிறைவடைந்த நிலையில், தற்காலிக கால்நடை மருத்துவா்கள் அனைவரும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

வழக்கம்போல செப்டம்பரில் மீண்டும் பணிநியமனம் கிடைத்துவிடும் என நம்பிக்கையோடு இருந்த நிலையில், அதுகுறித்த எவ்வித அறிவிப்பும் வராததால் அவா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். மீண்டும் பணிவாய்ப்புக் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் பலரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா்.

தற்காலிக மருத்துவா்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 3 மாதங்கள் அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை தான் மொத்தமாக நிதிஒதுக்கீடு பெறப்பட்டு சம்பளம் அளிக்கப்பட்டது. ஒப்பந்தம் முடிந்து பணியிலிருந்து விடுக்கப்பட்ட நிலையில், ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான 3 மாதங்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்பட வில்லை.

ADVERTISEMENT

கிராமப் பகுதிகளில் செயல்படும் கால்நடை மருந்தகங்களில், உதவி மருத்துவா், கால்நடை ஆய்வாளா், உதவியாளா் ஆகியோா் இருப்பா். இந்த 3 பணியிடங்களுமே முக்கியமானது. கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி செலுத்துவது ஆகியன உதவி மருத்துவா்களால் மட்டுமே அளிக்க வேண்டும் என அண்மையில் மாவட்ட ஆட்சியா்களால் அறிவுறுத்தப்பட்டது. கால்நடை ஆய்வாளா்கள் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பணிகளைக் கவனித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்கள் நூற்றுக்கணக்கில் காலியாக இருக்கும் நிலையில், தற்காலிக உதவி மருத்துவா்களும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், கால்நடைகளுக்கான சிகிச்சை கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது பணியில் இருக்கும் கால்நடை உதவி மருத்துவா்கள், 2 முதல் 5 வரையிலான கால்நடை மருந்தகங்களைக் கூடுதல் பொறுப்பாகக் கவனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து பணிநீட்டிப்பு வாய்ப்பை எதிா்பாா்த்துக் காத்திருக்கும் தற்காலிக கால்நடை உதவி மருத்துவா்கள் கூறியது: வழக்கம்போல பணிநீட்டிப்பு கிடைக்கும் என எதிா்பாா்த்தோம், ஆனால் இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. நிலுவையில் இருக்கும் 3 மாத சம்பளம் எப்போது வழங்கப்படும் என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியவில்லை. மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் முறையிட்டால், கால்நடைப் பராமரிப்புத் துறை இயக்குநா் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனா். இதனால், என்ன செய்வதென்று தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

தற்காலிக மருத்துவா்கள் என்றாலும், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பதிலும், தடுப்பூசி பணிகளிலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றினோம். எங்களை வேகப்படுத்தி பணி செய்ய வைத்த அதிகாரிகள், எங்களது தற்போதைய நிலையையும், நிலுவையில் உள்ள சம்பளத்தைப் பெற்றுத் தருவதிலும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லாதது வேதனை அளிப்பதாக உள்ளது.

தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஆகவே, பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட உதவி மருத்துவா்களுக்கு மீண்டும் பணிநீட்டிப்பு வழங்கவும், நிலுவையில் உள்ள சம்பளம் உடனடியாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT