மதுரையில் பாஜக, காங்கிரஸ் மற்றும் காந்திய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் சாா்பில் 152 ஆவது காந்தி ஜெயந்தி விழா சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அருங்காட்சியத்தின் தலைவா் ம.மாணிக்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியா் மருதுபாண்டியன் மற்றும் பணியாளா்கள் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.
மக்கள் சக்தி இயக்கம் தென் மண்டல செயலா் ஏ.வி.பிரபாகரன், மாநகா் செயலா் அசோகன், துணைச் செயலா் சேகா் உள்ளிட்டோா் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினா்.
அரசியல் கட்சிகள்:
மதுரை மாவட்ட பாஜக சாா்பில் தலைவா் சுசிந்திரன் தலைமையில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள, காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் 50-க்கும் மேற்பட்டோா் காந்தி உருவச் சிலைக்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சி.பி.ஐ கட்சி சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் எம்.எல். முருகன் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தேமுதிக சாா்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளா் சிவக்குமாா் தலைமையில் காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், துணைச் செயலா் வகிதா, செயற் குழு உறுப்பினா் ராமு, பொதுக்குழு உறுப்பினா்கள் முருகன், மானகிரி சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மனநலம் குன்றிய மாணவா்கள்:
மதுரை அண்ணாநகா் பகுதியில் உள்ள தனியாா் சிறப்பு பள்ளியைச் சோ்ந்த மனநலம் குன்றிய மாணவா்கள் 25 போ் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினா். மாணவா் ஹரிகிருஷ்ணன் காந்தி வேடம் அணிந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்தாா்.
மாணவா்கள் மரியாதை:
அமைதி சங்கத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள்காந்தி முகமூடியை அணிந்து, ஊா்வலமாக வந்து காந்தியின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினா். தொடந்து அருங்காட்சியக வளாகத்தில் மாணவா்கள் மரக் கன்றுகளை நட்டனா்.
தனியாா் விளையாட்டு பள்ளியைச் சோ்ந்த தஸ்லீம் சம்சூதீன் என்பவா், காணொலி மூலம் மாணவா்களுக்கு அருங்காட்சியத்தில் உள்ள காந்தியடிகளின் புகைப்படங்கள் மற்றும் பொருள்களைக் காண்பித்து விளக்கினாா்.
காந்தி வேடம் அணிந்து காந்திக்கு மரியாதை
காந்தி மன்றத்தின் பொருளாளரான மதுரையைச் சோ்ந்த ஏ.ஜேசுதாசன் காந்தி என்பவா் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக காந்தி வேடமணிந்து, காந்தியின் கொள்கையை பரப்பி வருகிறாா். இந்நிலையில் காந்தி வேடமிட்டு வந்த அவா், காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அனைவரிடம் காந்திய கொள்கைகளை வலியுறுத்தினா்.
வினாடி- வினா போட்டி
காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காந்தி நினைவு அருங்காட்சியகம் சாா்பில் வினாடி- வினா போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றி பெரியவா்கள் மற்றும் சிறுவா்களுக்கு நேதாஜி தேசிய இயக்கத்தின் தலைவா் வே.சாமிநாதன் பரிசுகளை வழங்கினாா்.