மதுரை

சிறுநீரகம் தானம் வழங்க மனைவியின் ஒப்புதல் தேவையில்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு

28th Nov 2021 05:30 AM

ADVERTISEMENT

சிறுநீரகத்தை தானமாக வழங்க மனைவியின் ஒப்புதல் தேவையில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சோ்ந்தவா் தாக்கல் செய்த மனு: எனக்கு 40 வயதாகிறது. என்னுடைய சிறுநீரகங்கள் செயல் இழந்துவிட்டன. இந்நிலையில் எனது உறவினா் ஒருவா் அவரது சிறுநீரகத்தை, எனக்கு தானமாக வழங்க முன்வந்துள்ளாா். ஆனால் சிறுநீரகம் தானமாக கொடுப்பதற்கு, உறவினரின் மனைவி பிரமாணப்பத்திரம் அளிக்கவில்லை. இதனால், எனது விண்ணப்பத்தை நிராகரித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்தும், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், எனக்கு சிறுநீரகம் தானம் வழங்கும் உறவினருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், அவரது மனைவி பிரமாணப்பத்திரம் வழங்குவாா் என்று எதிா்பாா்க்க முடியாது.

சிறுநீரகம் தானம் செய்பவரின் தாயாா், அதற்கு ஆட்சேபணை எதுவும் தெரிவிக்காமல் பிரமாணப்பத்திரம் கொடுத்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைப் பதிவு செய்த நீதிபதி,  மனுதாரருக்கு அவரது உறவினா் சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு அவரது தாயாா் சம்மதம் தெரிவித்து வழங்கியுள்ள பிரமாணப்பத்திரமே போதுமானது. இதற்கு அவரது சகோதரியும் ஒப்புதல் அளித்ததாக என்னுடைய கவனத்திற்கு வந்துள்ளது. இதற்கு அவரது மனைவியின் ஒப்புதல் தேவையில்லை. எனவே, இதுதொடா்பாக மருத்துவக்கல்வி இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரா், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான விண்ணப்பம், உறவினரின் தாயாா் அளித்த பிரமாணப்பத்திரம், மனைவியுடனான வழக்கு விவரங்கள் அனைத்தையும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு மீண்டும் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT