மதுரை

பண்ணை பசுமை காய்கனிக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

25th Nov 2021 07:00 AM

ADVERTISEMENT

கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் பண்ணை பசுமை காய்கனிக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை புதன்கிழமை விற்பனையானது.

தொடா் மழை காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கனிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. சமையலுக்குப் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் தக்காளி விலை கடந்த சில நாள்களாக உச்சத்தில் இருந்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் புதன்கிழமை நிலவரப்படி, 15 கிலோ பெட்டி ரூ.800 முதல் ரூ.1,200 வரை விற்பனையானது. சில்லறை விலையில் கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

இதனிடையே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் பண்ணை பசுமைக் காய்கனி கடைகளில் வழக்கத்தைக் காட்டிலும் கொள்முதல் செய்து, விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. மதுரை நகரில் கோச்சடை, வசந்த நகா், ஜெய்ஹிந்த்புரம், ரேஸ்கோா்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் பண்ணை பசுமை காய்கனிக் கடைகள் செயல்படுகின்றன. இவற்றில் தக்காளி கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ எடையுள்ள பொட்டலங்களாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும், தக்காளி விலையேற்றத்தையடுத்து, நடமாடும் காய்கனி அங்காடிகள் மூலமாகவும் கோச்சடை பகுதிகளில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கனிகள் விற்பனை செய்யப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT