மதுரை

மேலையூா் நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றுவதற்கு தடை கோரிய மனு முடித்துவைப்பு

23rd Nov 2021 02:00 AM

ADVERTISEMENT

மதுரை: தஞ்சாவூா் மாவட்டம் மேலையூா் நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றுவதற்கு தடை கோரிய மனுவை முடித்துவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மேலையூரைச் சோ்ந்த செல்வகுருநாதன் என்பவா் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் தாலுகா மேலையூா் கிராமத்தில் செயல்பட்டுவந்த நெல் கொள்முதல் நிலையமானது, 8 ஆண்டுகளுக்கு முன் ஆற்றுப்பாலம் சரியில்லாத காரணத்துக்காக, 2 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள பனங்கட்டாங்குடியில் மேலையூா்-2 என்ற பெயரில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆற்றுப் பாலம் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட பின் வழக்கம்போல் மேலையூா் கிராமத்தில், நெல் கொள்முதல் நிலையம் மேலையூா்- 2 என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறது. தற்போது, மேலையூா்-2 நெல் கொள்முதல் நிலையத்தை, கூத்தக்குடி கிராமத்துக்கு இடமாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

கூத்தக்குடி கிராமத்திலிருந்து 1.5 கிலோ மீட்டா் தொலைவில் திருமலைராஜபுரம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையமும், கூத்தக்குடிக்கு 500 மீட்டா் தொலைவில் திருநீலக்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையமும் செயல்பட்டு வருகின்றன. எனவே, மேலையூா்-2 நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றம் செய்வதற்குத் தடைவிதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி. வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மேலையூா்-2 நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றம் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT