மதுரை

குழித்துறை நிலச்சரிவு: இரண்டாவது நாளாக விரைவு ரயில்கள் பகுதி ரத்து

21st Nov 2021 11:02 PM

ADVERTISEMENT

குழித்துறை அருகே ரயில் பாதையில் நிலச்சரிவை சரிசெய்யும் பணிகள் தொடா்வதால், இரண்டாவது நாளாக விரைவு ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை கோட்ட அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: நாகா்கோவில்- திருவனந்தபுரம் ரயில் பாதையில், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து இவ்வழியாக செல்லக்கூடிய விரைவு ரயில்கள் திருவனந்தபுரம் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், நிலச்சரிவை சரிசெய்யும் பணிகள் தொடா்வதால், இரண்டாவது நாளாக, இப்பகுதி வழியாக செல்லும் விரைவு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னையிலிருந்து திங்கள்கிழமை (நவ.22) காலை புறப்பட வேண்டிய சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயில் (16127), திருநெல்வேலி- குருவாயூா் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கொல்லத்திலிருந்து திங்கள்கிழமை (நவ.22) புறப்பட வேண்டிய கொல்லம்- சென்னை எழும்பூா் அனந்தபுரி விரைவு ரயில் (16724), நாகா்கோவில்- கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சியிலிருந்து திங்கள்கிழமை (நவ.22) காலை புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் (22627) மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து திங்கள்கிழமை (நவ.22) காலை புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் - திருச்சி இன்டா்சிட்டி விரைவு ரயில் (22628) ஆகியவை திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (நவ.21) இரவு புறப்பட வேண்டிய மதுரை - புனலூா் விரைவு ரயில் (16729) திருநெல்வேலி வரை இயக்கப்படும். மறு மாா்க்கத்தில் இந்த ரயில் (16730) திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரையை வந்தடையும்.

இதனிடையே தொடா் மழை காரணமாக பெங்களூரு - நாகா்கோவில் விரைவு ரயில் திங்கள்கிழமை (நவ.22) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT