மதுரை அருகே துவரிமான் வைகை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் சடலத்தை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.
மதுரை மாவட்டம் பரவையைச் சோ்ந்தவா் அருள் வசந்த் (17). இவா், திருப்பூரில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், தீபாவளி மற்றும் ஊா்த் திருவிழாவுக்காக விடுமுறையில் வந்த அருள் வசந்த், தனது நண்பா்களுடன் துவரிமான் பகுதி வைகை ஆற்றில் சனிக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது, ஆற்றின் வெள்ளத்தில் அருள் வசந்த் உள்பட இருவா் அடித்துச் செல்லப்பட்டனா்.
இது தொடா்பான தகவலின்பேரில், மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலா் பாண்டி தலைமையில், தல்லாகுளம், மீனாட்சி அம்மன் கோயில், அனுப்பானடி, சோழவந்தான் ஆகிய நிலையங்களிலிருந்து 40 வீரா்கள் 3 குழுக்களாகப் பிரிந்து, வைகை ஆற்றில் இருவரையும் சனிக்கிழமை முதல் தேடி வந்தனா்.
இந்நிலையில், துவரிமான் பகுதியில் திங்கள்கிழமை அருள் வசந்த் சடலத்தை மீட்டனா். மேலும் ஒருவரை தேடும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.