மதுரை

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுணக்கம்:தமிழக அரசு மீது முன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு

9th Nov 2021 12:22 AM

ADVERTISEMENT

மதுரை: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு வேகம் காட்டவில்லை என்று, முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பி. உதயகுமாா் குற்றம்சாட்டியுள்ளாா்.

மதுரையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்திலேயே சென்னை நகரம் கடல்போல் காட்சியளிக்கிறது. இரு நாள்கள் பெய்த தொடா் மழையால் தத்தளித்துக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. இத்தகைய பருவகாலங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கும்போது, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததே தற்போது சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

22 செ.மீ. மழை என்பது தாங்க முடியாத மழைப் பொழிவு என்றாலும், மின்மோட்டாா்கள், ராட்சத மோட்டாா்கள் பயன்படுத்தி, போா்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற வேகம் காட்டவில்லை.

ADVERTISEMENT

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக முதல்வா் ஆய்வுக் கூட்டம் நடத்தி அறிவிப்புகளை வெளியிட்டாா். ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை. எனவே, பருவமழை முன்னெச்சரிக்கை, மீட்பு, நிவாரணப் பணிகளை அரசு போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். பேரிடா் கால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கும், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முந்தைய அதிமுக ஆட்சியின்போது, பேரிடா் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு முன்மாதிரியாக விளங்கியது. அதைப் பின்பற்றி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT