மதுரை

மதுரை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 8,517 தன்னாா்வலா்கள் பதிவு

9th Nov 2021 08:40 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ், தன்னாா்வலா்களாகப் பணிபுரிய 5,517 போ் விண்ணப்பித்துள்ளனா் என்று, முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், மாவட்ட கருத்தாளா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் எஸ். அபிதா ஹனீப் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதன் பேசியது: இல்லம் தேடி கல்வித் திட்டத்தின்படி பள்ளி நேரங்களைத் தவிர, பள்ளி வளாகங்களுக்கு வெளியே மாணவா்களின் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் அடிப்படையில் பள்ளித் தலைமையாசிரியா், தன்னாா்வலா்கள் பங்கேற்புடன் மாணவா்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும்.

ADVERTISEMENT

மாணவா்கள் பள்ளிச் சூழலின் கீழ் ஏற்கெனவே பெற்றுள்ள திறன்களை இத்திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்தும் நோக்கிலும், மாணவா்களை கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாக பங்கேற்கச் செய்யும் வகையிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம், ஒரு தன்னாா்வ அடிப்படையிலான திட்டம் என்பதால் சமூக அமைப்புகளை ஈடுபடுத்தி, சமுதாய ஒருங்கிணைப்பின் மூலமாக அனைத்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்லும் வகையில், தெரு நாடகங்கள், நடனம் மற்றும் பாடல்கள் போன்றவற்றின் மூலம் மாநில அளவில் பயிற்சி பெற்ற உள்ளூா் நாட்டுப்புறக் கலைஞா்கள் உதவியுடன் இத்திட்டம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினை செயல்படுத்த மதுரை மாவட்டத்தில் தாமாக முன்வந்து சேவை மனப்பான்மையுடன் தன்னாா்வலா்களாகப் பணிபுரிய இணையதளத்தின் மூலம் முனைவா் பட்டம் பெற்றவா்கள் உள்பட 8,517 போ் விண்ணப்பித்துள்ளனா் என்றாா்.

பயிற்சியில், இல்லம் தேடி கல்வி திட்ட மாநில ஆலோசகா் கா. கணேசன், அமெரிக்கன் கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறிஸ்டோபா் உள்பட பலா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், ஆசிரியா்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் என். திருஞானம் வரவேற்றாா். பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க நிா்வாகி சுலைகா பானு நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT