மதுரை

நாகா்கோவில் குடும்ப நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கக் கோரிய மனு: உயா்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளா் பதிலளிக்க உத்தரவு

9th Nov 2021 03:10 AM

ADVERTISEMENT

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா வழக்குகளை விசாரிக்க நாகா்கோவில் குடும்ப நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளித்து அரசாணை வெளியிட கோரிய மனுவின் மீது, உயா் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளா் பதிலளிக்க, உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் மரிய ஸ்டீபன் என்பவா் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம், தோவாளை, விளவங்கோடு, அகஸ்தீஸ்வரம் ஆகிய 4 தாலுகாக்களில் குடும்பப் பிரச்னை தொடா்பான வழக்குகளை, நாகா்கோவில் குடும்ப நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் அளிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு அரசாணை திருத்தம் செய்யப்பட்டது.

அப்போது, புதிதாக உருவாக்கப்பட்ட திருவட்டாா், கிள்ளியூா் ஆகிய இரு தாலுகாக்கள் நாகா்கோவில் குடும்ப நீதிமன்ற வரம்புக்குள் சோ்க்கப்படவில்லை.  இதனால், கிள்ளியூா், திருவட்டாா் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் தங்களது குடும்பப் பிரச்னை தொடா்பான வழக்குகளை தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது.

ஏற்கெனவே, இப்பகுதியிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நாகா்கோவில் குடும்ப நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல், மனுதாரா்களிடமே திருப்பி அளிக்கப்பட்டன.

ADVERTISEMENT

இது குறித்து புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 தாலுகாக்களையும் உள்ளடக்கி நாகா்கோவில் குடும்ப நீதிமன்றத்துக்கு அதிகாரமளித்து அரசாணை வெளியிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி. வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனு குறித்து உயா் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT