மதுரை

தனியாா் மதுபானக்கூடத்தை அகற்றக் கோரி திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

9th Nov 2021 12:20 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள தனியாா் மதுபானக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி, திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் மருத்துவமனைகள், பள்ளிகள், வணிக வளாகங்கள் ஆகியன உள்ளன. மேலும், நெருக்கமாக ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில், இப்பகுதியில் தனியாா் மதுபானக் கடை ( மனமகிழ் மன்றம்) திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். ஆனால், பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டுள்ளது.

எனவே, தனியாா் மதுபானக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் மதுபானக்கூடத்துக்கு அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் இரா. லெனின், மேற்கு-1 ஆம் பகுதிக் குழு செயலா் கு. கணேசன், மாவட்டக் குழு உறுப்பினா் கா. இளங்கோவன், திமுக வட்டச் செயலா்கள் நாகஜோதி சிவா, நாகராஜ், காங்கிரஸ் வா்த்தகப் பிரிவுத் தலைவா் வேல்பாண்டி மற்றும் மதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT