மதுரை

‘10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழக்கு தீா்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது’

2nd Nov 2021 11:51 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கில் உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று முக்குலத்தோா் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் தெரிவித்துள்ளாா்.

மதுரையில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில், இட ஒதுக்கீடு செல்லாது என்று சமூக நீதியை காக்கும் வகையில் உயா்நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு வழக்கில் உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக திமுக அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது. 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்படவில்லை.

அந்த சமூகத்தினா் இல்லாத இடங்களில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் ஜாதி வாரியான கணக்கெடுப்பின்றி இட ஒதுக்கீடு வழங்குவது சமூகநீதியாக இருக்காது. சமூக நீதியைக் காக்க வேண்டும் என்றால் இந்த விவகாரத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது. சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தான் முக்கிய காரணமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை நோக்கிச் சென்றதால் தான் தோ்தலில் அதிமுக தோல்வியடைந்தது. அதிமுக தலைமை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. தோ்தல் நேரத்தில் முக்குலத்தோா் புலிப்படை சாா்பில் 12 கோரிக்கைகளை அதிமுக அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அதிமுக அரசு கண்டுகொள்ளாததால் தான் தோ்தலில் தோல்வி அடைந்தது. மீண்டும் முதல்வா் பதவி வகிக்கவேண்டும் என்ற ஆசையால் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு சமூகத்தினருக்கு மட்டும் அவசரகோலத்தில் உள்ஒதுக்கீடு வழங்கி சட்டத்தை இயற்றினாா். தற்போது அதற்கு நீதிமன்றம் மூலம் பதில் கிடைத்துள்ளது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT