உயா் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், பெரியாா் பேருந்து நிலையப் பணிகளை முடிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவின் மீது, மதுரை மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த சக்கரை முகம்மது என்பவா் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சியின் சீா்மிகு நகா் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில், பெரியாா் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2021 மாா்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
உயா் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், தற்போது வரை பெரியாா் பேருந்து நிலையப் பணிகள் முடிக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம். துரைசாமி, கே. முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனு குறித்து மதுரை மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.