மதுரை

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூல்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

6th May 2021 11:22 PM

ADVERTISEMENT

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வெரோனிகா மேரி தாக்கல் செய்த மனு: தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிா்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 50 சதவீதப் படுக்கைகளை காலியாக வைத்திருக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தனியாா் மருத்துவமனைகள் அரசின் உத்தரவைக் கடைபிடிப்பதில்லை. கரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. தமிழக முதல்வா் மற்றும் பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை தனியாா் மருத்துவமனைகள் ஏற்பதில்லை.

எனவே அரசு உத்தரவுப்படி தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 50 சதவீதப் படுக்கைகளை காலியாக வைக்கவும், கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து சிகிச்சைக் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து நீதிபதிகள், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு நிா்ணயம் செய்ததைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது பெரிய பிரச்னையாக உள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதியை வெளிப்படையாக அறிவித்தால் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் இருப்பு குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதால் சாதாரண மக்களுக்கும் படுக்கை வசதி கிடைப்பது உறுதி செய்யப்படும். எனவே கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மே 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT