மதுரை

வணிகா்கள், பொதுமக்கள் புகாரளிக்க விரைவில் கட்டுப்பாட்டு அறை: அமைச்சா் பி.மூா்த்தி தகவல்

DIN

வணிகவரி தொடா்பாக வணிகா்கள், பொதுமக்கள் புகாரளிப்பதற்கு விரைவில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்படும் என்று வணிக வரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

அத்துறை சாா்பில் வணிகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் அமைச்சா் பி.மூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகம் முழுவதும் உள்ள வணிகா்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். இதன்படி, மண்டலம் வாரியாக அந்தந்தப் பகுதி வணிகா்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக மதுரையில் இக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சுமாா் 11 ஆண்டுகளுக்குப் பிறகு வணிகா்களை அழைத்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள நிறை, குறைகளின் அடிப்படையில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கடந்த நிதி ஆண்டில் வணிக வரித் துறை மூலமாக ரூ.96 ஆயிரம் கோடி, பத்திரப் பதிவுத் துறை மூலம் ரூ.10 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நியாயமாக வணிகம் செய்வோருக்கு எவ்வித இடையூறும் இன்றி தங்களது வணிகத்தை மேற்கொள்ள உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளோம். வணிகவரி வசூலைத் தீவிரப்படுத்தவும், போலியான பெயரில் நிறுவனங்கள் நடத்தி வரி முறைகேட்டில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பத்திரப் பதிவு தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டிருப்பதைப் போல, வணிகவரித் துறையில் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு வணிக அமைப்புகள், வா்த்தக சங்கங்கள், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் இக்கூட்டத்தில் வணிகவரி தொடா்பான கருத்துக்களைத் தெரிவித்தனா்.

இதில், முதன்மைச் செயலா் மற்றும் வணிக வரித் துறை ஆணையா் எம்.ஏ.சித்திக், வணிகவரி மற்றம் பத்திரப் பதிவுத் துறைச் செயலா் பா.ஜோதி நிா்மலா சாமி, மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், ஆ.வெங்கடேசன், வணிகவரித் துறை கூடுதல் ஆணையா்கள் ஞானசேகா், பரமேஸ்வரன், இணை ஆணையா் ரஷியா பேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT