மதுரை

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு தேமுதிகவினர் சாலை மறியல்

3rd Jan 2021 03:53 PM

ADVERTISEMENT

திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியில் தேமுதிக நிர்வாகிகள் கைது செய்ததைக் கண்டித்து அக்கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியில் அக்கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர் சுதீஷ் வரவேற்க தேனி மாவட்ட தேமுதிகவினர் காத்திருந்தனர். அப்போது மழை பெய்ததால் தேமுதிகவினர் சுங்கச்சாவடிகாக அமைக்கப்பட்ட கூரையில் நின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த திருமங்கலம் போலீசார் தேமுதிகவினரை விலகி நிற்குமாறு அறிவுறுத்தினர். 

இதனால் போலீசாருக்கும் தேமுதிகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தேனி மாவட்ட தேமுதிக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தேமுதிகவினர் 50க்கும் மேற்பட்டோரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். அதேசமயம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த சுதீஷ் கார் மூலம் எட்டயபுரத்திற்கு செல்வதற்காக தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினர் சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த போது, அவர்களிடம் சுங்கச்சாவடியில் காத்திருந்த தேமுதிகவினர் கைது செய்யப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இதையடுத்து தேனி மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தேமுதிகவினர் கைது செய்ததைக் கண்டித்து 300க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும், தேமுதிகவினருக்கும் தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அக்கட்சியின் நிர்வாகிகளை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என தேமுதிகவினர் தெரிவித்தனர்.

இதனிடையே அவ்வழியே வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் பேரவையினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் கடந்த போது, இச்சம்பவம் அறிந்து அவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் சுங்கச்சாவடி வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட தேமுதிக நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தேமுதிகவினர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். 

கொட்டும் மழையில் தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது மதுரை- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில்  பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.

Tags : DMDK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT