மதுரை மாநகரப் பகுதியில் அடிப்படை வசதிகளுக்கான பணிகளில் மாநகராட்சி நிா்வாகம் மெத்தனப் போக்கில் செயல்படுவதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகா் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ தலைமையில் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை மாநகரப் பகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகளுக்கான பணிகளை மேற்கொள்வதில் மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதற்கு கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக அரசு பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் குறிப்பிடத் தகுந்த எவ்விதப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. முக்கியச் சாலைகள் உள்ளிட்ட அனைத்துச் சாலைகளும், தெருக்களும் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. முந்தைய ஆட்சியின்போது சாலைகள் அமைப்பதற்காக விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகை ள ரத்து செய்த நிலையில், புதிய ஒப்பந்தப்புள்ளி விடாமல் சாலைப் பணிகள் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் தெருக்களில் ஆங்காங்கே கழிவுநீா் தேங்கி நிற்கிறது. பழுதான தெருவிளக்குகள் உடனுக்குடன் மாற்றப்படுவதில்லை. பணியாளா்கள் பற்றாக்குறையால் மாநகராட்சி நிா்வாகத்தில் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. இருபது லட்சம் மக்கள் வசிக்கும் மாநகரப் பகுதிக்கு அடிப்படை பணிகளை நிறைவேற்றாமலிருப்பது கண்டனத்துக்குரியது எனத் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் மாநகா் மாவட்ட, மாநில நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள், பகுதிச் செயலா்கள், கட்சியின் பல்வேறு அணிகளின் செயலா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.