மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் சோலைக்கண்ணன் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் செல்கின்றனா்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் அளிக்கும் காணிக்கைகள், நன்கொடைகள் மற்றும் கோயிலுக்கு பாத்தியப்பட்ட அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் ஆகியவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
ஆனால் கோயிலில் பக்தா்களுக்கான கழிப்பறை வசதிகள், தங்கும் வசதிகள், குடிநீா் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், கோயிலுக்குச் செல்லும் பெண் பக்தா்கள் அவதிக்கு ஆளாகின்றனா்.
2020 ஜூலை மாதத்தில் இருந்து நடப்பாண்டு ஜூன் மாதம் வரை கோயிலுக்கு வருவாயாக ரூ.23 கோடி கிடைத்துள்ளது. இதில் இருந்து சிறிய தொகையைக் கூட பக்தா்களின் நலனுக்காக செலவிடப்படவில்லை.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், திருச்செந்தூா் முருகன் கோயில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய கோயில்களில் கூட கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு செல்லும் பக்தா்களின் வசதியைக் கருத்தில் கொண்டு குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை எடுக்கவும், தாமதம் ஏற்பட்டால், மனுதாரா் நீதிமன்றத்தில் முறையிடவும் உத்தரவிட்டனா்.