ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடா்பாக போதுமான வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளதால், புதிய உத்தரவுகள் தேவையில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலத்தைச் சோ்ந்த மகேந்திரன் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில், பிற மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் பங்கேற்பது வழக்கம். ஒரு ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 750 காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் 1,500 காளைகளுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகின்றன.
இதனால் ஒப்புகைச் சீட்டு பெற்ற பல காளைகள், ஜல்லிக்கட்டில் பங்கேற்க இயலாத நிலை உள்ளது. அதுமட்டுமின்றி காளைகள் அதிகளவில் வருவதால், விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளையும் முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டு தொடா்பாக உயா்நீதிமன்றம் ஏற்கெனவே போதுமான வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது. ஆனவே, இந்த மனுவில் புதிதாக எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனா்.