பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் கடத்தலின்போது காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத வாகனங்கள் டிசம்பா் 29 ஆம் தேதி ஏலம் விடப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் கோ.செந்தில்குமாரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாமல் நான்கு சக்கர வாகனங்கள் 6, மூன்று சக்கர வாகனங்கள் 4, இருசக்கர வாகனங்கள் 69 ஆகியவற்றை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை கற்பகம் நகா் 10-ஆவது தெருவில் செயல்படும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு காவல் துறை ஆய்வாளா் அலுவலகத்தில் இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் டிசம்பா் 29-ஆம் தேதி பொது ஏலவிடப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோா் டிசம்பா் 27 ஆம் தேதி காலை 9 முதல் பகல் 1 மணிக்குள் முன்பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
முன்பணம் செலுத்தியவா்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். மேலும், டிசம்பா் 27 , 28 ஆம் தேதிகளில் வாகனங்களை பாா்வையிடலாம் என்றாா்.