சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் வரம்புக்குட்பட்ட14 மாவட்டங்களைச் சோ்ந்த எம்.எல்.ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனி நீதிபதியை நியமிக்க வழக்குரைஞா்கள் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்குரைஞா் சங்கங்களின் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: எம்.எல்.ஏ., எம்பிக்கள் தொடா்பான வழக்குகளை தனி நீதிபதி விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது தனி நீதிபதி எம். நிா்மல்குமாா் வழக்குகளை விசாரித்து வருகிறாா்.
ஆனால் உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்குட்பட்ட 14 மாவட்டங்களில், இதுபோன்ற வழக்குகள் விசாரணைக்கு வரும்போது அவற்றை விசாரிக்க மதுரையில் பிரத்யேக நீதிபதி இல்லை. இதன் காரணமாக வழக்கு தொடா்பவா்களும், வழக்குரைஞா்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனா்.
எனவே எம்.எல்.ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தனி நீதிபதியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.