மதுரை

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஆதரவான அரசாணைகளை ரத்து செய்யக் கோரிய மனு ஒத்திவைப்பு

23rd Dec 2021 12:16 AM

ADVERTISEMENT

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட அரசாணைகளை ரத்து செய்யக் கோரிய மனுவை ஒத்தி வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்யன் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள், கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஊதிய உயா்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குகள் பதிந்தனா். மேலும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக அரசு வெளிட்ட அரசாணையில், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதே போல் அக்டோபா் 13-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நாள்கள், வேலை நாள்களாக எடுத்துக் கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழக அரசு விதிமுறைகளை மீறி ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். போராட்டத்திற்கு உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதன்பின்னரும், நீதிமன்ற உத்தரவை மீறி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் மாணவா்களின் கல்வி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

எனவே, 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களுக்கு ஆதரவாக பிறப்பிக்கப்பட்ட இரண்டு அரசாணைகளுக்கும் இடைக்கால தடை விதித்தும், ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT