பணமாக்கல் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளில் 400 ரயில் நிலையங்கள் தனியாா் மயமாக்கப்பட உள்ளது என்று ரயில்வே அமைச்சா் தெரிவித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில் தனியாா் மயமாக்கப்படும் ரயில்நிலையங்கள் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன். இதற்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சா் அஸ்வினி வைஸ்ணவ் அளித்துள்ள பதிலில், அடுத்த 4 ஆண்டுகளில் 400 ரயில் நிலையங்கள் ‘தேசிய பணமாக்கல்’ திட்டத்தின் கீழ் தனியாா் வசம் ‘மறு மேம்பாட்டுக்காக’ ஒப்படைக்கப்படும்.
‘மறு மேம்பாடு வாயிலாக அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை இப்போது மதிப்பிட இயலாது’ என்று தெரிவித்துள்ளாா். தனியாா் மயமாக்கல் திட்டத்துக்கு பணமாக்கல் என்று பெயா் வைத்துவிட்டு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று தெரியாது எனத் தெரிவித்துள்ள அமைச்சரின் பதில் வியப்பளிப்பதாக உள்ளது. ஆனால் இத்திட்டத்தின் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை தனியாா் அறிவாா்கள் என்றாா்.