தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி யூடியூபா் மாரிதாஸ் தாக்கல் செய்த மனுவின் மீது பதிலளிக்க திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் காவல் ஆய்வாளருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
காரோனா முதல் அலை பரவியபோது, தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிக்க குறிப்பிட்ட ஒரு சமூகத்தினா் தான் காரணம் என யூடியூபா் மாரிதாஸ் விடியோ பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாரிதாஸ் மீது 2020 ஏப்ரல் 4 ஆம் தேதி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மாரிதாஸ் தரப்பில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு குறித்து மேலப்பாளையம் காவல் ஆய்வாளா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பா் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.