சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றிய 9 ஆவது வாா்டுக்கான தோ்தல் முறைகேடு வழக்கில், வாக்குச் சீட்டுகள், விடியோ பதிவுகள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சரஸ்வதி தாக்கல் செய்த மனு: கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9 ஆவது வாா்டு கவுன்சிலா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட்டேன். கடந்த 2019 டிசம்பா் 30 ஆம் தேதி தோ்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை 2020 ஜனவரி 2 இல் நடைபெற்றது. எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளரை விட 34 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தேன். அப்போது வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் புகுந்த அதிமுகவினா் தோ்தல் அதிகாரிகளை மிரட்டி, அதிமுக வேட்பாளா் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவித்தனா்.
இதனால், மறுவாக்கு எண்ணிக்கை கோரிய எனது மனு தோ்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. எனவே, எனது கோரிக்கையை நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தோ்தலில் பதிவான வாக்குச் சீட்டுகள், விடியோ பதிவுகள் ஆகியவற்றை பாதுகாத்து வைக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.