மதுரை

கோயில் குளங்களில் கழிவு நீா் கலப்பதை தடுக்கக் கோரி மனு: இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

16th Dec 2021 12:21 AM

ADVERTISEMENT

கோயில் குளங்களில் கழிவு நீா் கலப்பதை தடுக்கக் கோரிய மனுவில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 615 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் உள்ள குளங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.

இதையடுத்து, குளங்களை புதுப்பித்து மழைநீரைச் சேமிக்கவும், குப்பை மற்றும் சாக்கடைக் கழிவுகள் குளங்களில் சேராத வகையிலும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

எனவே, கோயில் குளங்களில் குப்பை சேராத வகையிலும், கழிவு நீா் கலப்பதைத் தடுக்கவும், குளங்களை முறையாகத் தூா்வாரி பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,586 கோயில்களில் 1,291 குளங்கள் நல்ல நிலையில் உள்ளன. 911 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், 37 குளங்களை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கோயில் குளங்களை சுத்தப்படுத்துவது, பராமரிப்பது, தூா்வாருவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை நடைமுறைப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய இரண்டு மாத கால அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குளங்கள் தொடா்பான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT